Wednesday, May 16, 2012

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்?

அண்மையில் வேதனை மிகுந்த சம்பவம் ஒன்று யாழ் சோனகதெருவில் நடைபெற்றுள்ளது. முஸ்லிம் கல்லுரி வீதியில் பெரிய பள்ளிவாசலிற்கும் ராஜ்கோபால்ஸ் நஜீப் அவர்களது வீட்டிற்கும் நடுவில் இருப்பது கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள கட்டடம். 22 வருடங்களிற்கு முன்பு யாழ் ஜமாதே இஸ்லாமியினரால் “மதரஸா” ஒன்றை நிர்மாணிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டடம் அது.

அந்த கட்டடத்தில் தான் அசம்பாவிதம் நடந்துள்ளது. வாக்குவாதம் வன்முறையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கும் அளவிற்கு நிலைமைகள் உருவாகியுள்ளன. பிரச்சனைக்கு அடிப்படை காரணம் யாருக்கு கட்டடத்தை நிர்வகிக்கும் உரிமையுள்ளது என்பதே.


22 வருடங்கள் கழிந்தும் நம்மில் சிலர் அதே பழைய முரண்பாட்டு மனோபாவத்தில் இருப்பது கவலை தரும் விடயமாகும். இவை யாழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் அறிகுறிகள் அல்ல. மாறாக பரஸ்பர குரோத உணர்வுகள் உள்ள ஒரு சமுதாயமாகவே எம்மை மாற்றிவிடும்.

ஒன்று மட்டும் நிச்சயமான உண்மை. “கட்டடம் எந்த தனி நபரிற்கும் உரித்தானதல்ல. அது யாழ் முஸ்லிம்களின் சொத்து”.  


நாம் மீண்டும் யாழ்ப்பாண சோனகதெருவில் குடியேறுவதிலேயே ஆயிரம் பிரச்சனைகள் உள்ள நிலையில் இவ்வாறு முரண்படுவது தவறானது. கண்டிக்கத்தக்கது. இந்த கட்டடம் தொடர்பான தெளிவான தீர்வை நாம் ஒற்றுமையாக ஒன்று கூடி விவாதிபதன் மூலமே அடைய முடியும். பரஸ்பர பல பிரயோகங்களால் அல்ல. ஒருவரை ஒருவர் அடிப்பதனால் உண்மைகளை மறைத்து விட முடியாது.

கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட காணியை வழங்கியவர்கள் இவ்வாறான பிரச்சனைகள் வரும் என தெரிந்திருந்தால் நிச்சயமாக வழங்கியிருக்க மாட்டார்கள். நல்ல நோக்கத்திற்காகவே அதை அவர்கள் வழங்கியுள்ளனர்.

நாம் செய்த நன்மைகளை தவிர மறுமையில் எதையும் நாம் கொண்டு போகப்போவதில்லை. இதை ஏன் நம்மில் சிலர் உணர மறுக்கின்றனர்?.


அதிகாரம், புகழ், பதவி, சொத்து என எதுவும் எமக்கு துணை வரப்போவதில்லை. சமூகத்திற்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் குழப்பங்களை உருவாக்குவதும், வன்முறையில் இறங்குவதும் தவிர்க்கபடல் வேண்டும். இவை யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றிய பலரது பார்வையிலும் தவறான, இழுக்கான எண்ணங்களையே விதைக்கும்.


சற்று சிந்திப்போம். சிந்தனையில்லாதவர்களை சிந்திக்க வைப்போம். யாழ் முஸ்லிம்களின் சமூக ஒற்றுமைக்காக மார்கம் விதித்த எந்த எல்லைக்கும் கீழிறங்கி விட்டு கொடுக்கும் பக்குவம் அற்றவர்கள் புறந்தள்ளபட வேண்டியவர்களே.

No comments:

Post a Comment