Saturday, May 26, 2012

அமெரிக்க அணு விசை நீர்மூழ்கி கப்பலில் பயங்கர தீ விபத்து


அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அணு விசை நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.இந்த விபத்தில் அணு உலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மியாமி கடற்கரைப் பகுதியில் உள்ள போர்ட்ஸ்மெளத் கடற்படைத் துறைமுகத்தில் இந்த அணு விசை நீர்மூழ்கிக் கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இதன் திறனை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் புதன்கிழமை இரவு இந்தக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக துறைமுக செய்தித் தொடர்பாளர் டாமி ரெமிக் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கப்பலின் முன்பகுதியில் தீப்பற்றியது. இப்பகுதியில் ஊழியர்கள் தங்குமிடம் மற்றும் கட்டுப்பாட்டு அறை உள்ளது.
கடற்படைக்குச் சொந்தமான இந்த நீர்மூழ்கியில் எவ்வித ஆயுதங்களும் இல்லை. பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்ததால், ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது என்றார்.
காயமடைந்தவர்களில் 5 பேர் தீயணைப்புப் படை வீரர்களாவர். இருவர் கப்பல் பணியாளர்களாவர். இதில் 6 பேருக்கு லேசான காயமும் ஒருவருக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிக்சை மேற்கொள்ளும் அளவுக்கு காயமேற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கியில் உள்ள அணு உலையின் செயல்பாடு இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment