Tuesday, December 27, 2016

அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ்


இலங்கை நிர்வாக சேவையில் சித்தி அடைந்த முதலாவது முஸ்லிம் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் இனிய நினைவுகள்
யாழ் மண்ணில் பிறந்து நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் கல்விக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் பொதுநல சேவைகளுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒருவர்தான் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆவார்கள்.
யாழ்ப்பாணம், சோனக தெருவில் கீர்த்தி மிக்க குடும்பமான சட்டத்தரணியும் காதியாருமான அபூபக்கர்- சுல்தான் முஹம்மது நாச்சியா தம்பதியினருக்கு மூத்த புதல்வராக எ.எம்.எ. அஸீஸ் 1911 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி பிறந்தார்.

எ.எம்.எ. அஸீஸ் அவர்களின் தகப்பனார் அபூபக்கர் அவர்கள் புகழ் பெற்ற புலவர் திலகம் சு.மு. அஸனா லெப்பையின் புதல்வராவார். தந்தை அபூபக்கர் அவர்கள் யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக பல வருடங்கள் சேவையாற்றினார். 1941 இல் யாழ்ப்பாண நகரசபையில் உப தலைவர் பதவியையும் அலங்கரித்தவர்.இன்றும் இவரது பெயரில் காதி அபூபக்கர் வீதி என்று ஒன்று உள்ளது.

அவரின் ஏழாவது வயதில் தாயார் காலமாகி விடவே, தாயாரின் பெற்றோரின் பராமரிப்பில் வளர்ந்தார். இவரது சகோதரி ஷரீபா அவர்களை முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை மேயரும் சட்டத்தரணியும் குவாஸியுமான எ.எம். சுல்தான் அவர்கள் திருமணம் செய்தார்கள். சிறுபராயத்தில் அஸீஸ் மீது பாசமும் பரிவும் காட்டியவர்களில் சு.மு. அஸனா லெப்பை புலவர் மிக முக்கியமானவர். புலவர் அஸனா லெப்பை மீது எ.எம்.எ. அஸீஸ் பெருமதிப்பு வைத்திருந்தார். அஸீஸின் ஆய்வு ஆர்வத்தை தூண்டியதில் சு.மு. அஸனா லெப்பைக்கு முக்கிய பங்கு உண்டு.

அஸீஸ் தனது ஆரம்பக்கல்வியை குர்ஆனும் தமிழும் சேர்த்து கற்பிக்கப்பட்ட அல்லா பிச்சை பள்ளியில் (முஹம்மது முஸ்லிம் கலவன் பாடசாலை) ஆரம்பித்தார். குர்ஆன் பள்ளிக்கூட கல்வியை நிறைவு செய்துகொண்டு, திட்டமிட்டபடி 1921 இல் வண்ணார் பண்ணை இராமகிருஷ்ண மிஷன் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் தமது கல்வியை அஸீஸ் ஆரம்பித்தார். சாரம், தொப்பி முதலிய இஸ்லாமிய கலாசார உடையுடன் அஸீஸ் அப்பள்ளிக்கூடம் சென்றார். சுமார் இரண்டு வருடங்கள் மட்டுமே வைத்தீஸ்வராவில் கல்வி கற்ற போதும் கல்வி, ஒழுக்கம், நற்பண்புகளின் வளர்ச்சி என்பவற்றில் தம்மை சிறப்பாக வழிநடாத்திய கல்வி நிலையம் என வைத்தீஸ்வரா வித்தியாலயம் பற்றி அஸீஸ் தமது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் அஸீஸின் இடைநிலைக் கல்வி யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் 1923 இல் 06 ஆம் வகுப்பில் ஆரம்பமானது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் அஸீஸ் முதல் முஸ்லிம் மாணவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1929 இல் அவர் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரது கல்வி வாழ்வு யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் நீடித்தது. வீட்டுச் சூழலும் வைத்தீஸ்வரா மற்றும் இந்துக் கல்லூரி பிரவேசங்களும் அஸீஸ் தமிழிலும் நல்ல பயிற்சியை பெற்றுக்கொள்ள வாய்ப்பை அளித்தன. பிற்காலத்தில் அவர் தமிழ் மொழியிலும் சிறந்த பேச்சாளரகவும் எழுத்தாளராகவும் விளங்க அவரது இக்கல்லூரிகளின் தொடர்புகளும் பக்கபலமாக இருந்துள்ளன. 1929 இல் இலங்கை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்று துறையை சிறப்பு பாடமாக தெரிவு செய்து 1933 இல் வரலாற்றில் (B.A.,Hons) சிறப்புப் பட்டத்தை பெற்றார். வரலாற்று துறையில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக இலங்கை அரசாங்கம் 1933 இல் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புனித கத்தரின் கல்லூரியில் வரலாற்று துறையில் மேற்படிப்பை தொடர்வதற்கு புலமைப் பரிசில் வழங்கியது. அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் சிறப்பு பட்டம் பெற்றார். இவர் இலங்கை சிவில் சேவையாளருக்கான தேர்விலும் சித்தி பெற்றார். இலங்கை நிர்வாக சேவையில் சித்தியடைந்த முதலாவது முஸ்லிம் இவரே ஆவார்.

கொழும்பில் பாரசீக கொன்ஸலராக கடமையாற்றிய எம்.ஐ. முஹம்மத் அலியின் பேர்த்தியும், இலங்கை சட்ட நிரூபண சபையின் முதலாவது முஸ்லிம் அங்கத்தவரான எம்.ஸி. அப்துல் ரகுமானின் பூட்டியுமான உம்முகுல்தூம் என்பவரை 1937 இல் அஸீஸ் திருமணம் செய்தார். அஸீஸ் தம்பதியினர் மரீனா சுல்பிக்கா, முஹம்மத் அலி, இக்பால் ஆகியோரைப் பெற்றெடுத்தனர். அஸீஸ்- உம்முகுல்தூம் திருமணப் பந்தம் நட்புறவுடன் கூடிய குடும்ப பாசமாக இறுதி வரை பிரகாசித்தது. அஸீஸின் வெற்றிகளின் பின்னணியில் உம்முகுல்தூமின் நிறைவான ஒத்துழைப்பும் அன்பும் ஒன்று கலந்திருந்தது.

1942 இல் அஸீஸ் உதவி அரசாங்க அதிபராக கல்முனையில் சேவையில் இருக்கும் காலத்தில் அரசாங்க கடமைகளோடு, பொதுநல ஈடுபாடு, மக்கள் சேவை, வரலாற்று ஆய்வுகளுக்கான தகவல்களை சேகரித்தல் போன்ற பல பணிகளை அவர் முன்னெடுத்தார். இக்கால கட்டத்தில் சுவாமி விபுலானந்தருடனும், இஸ்லாமிய மற்றும் கல்வி எழுச்சிகளையும் பற்றி பாடிவந்த மூத்த முஸ்லிம் கவிஞரான காத்தான்குடி அப்துல் காதர் லெப்பையுடனும் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார். 

1943 இல் அஸீஸ் மாற்றலாகி கண்டியில் தனது பணிகளை ஆரம்பித்தார். கண்டியில் தனது அரச பணிகளுக்கு மத்தியில் பொதுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டதோடு படித்த மற்றும் வர்த்தக பிரமுகர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். அதன் விளைவுகளாக இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தை (YMMA) ஸ்தாபிப்பதிலும் அவர் வெற்றி கண்டார்.

முஸ்லிம் மாணவர்களின் கல்வியானது வறுமையினால் தடைபடக் கூடும் என்று உணர்ந்த அஸீஸ் 1945 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி (Ceylon Muslim Scholarship Fund) என்ற நிதி நிறுவனத்தை கொழும்பில் உருவாக்கினார். இன்றும் அது இயங்கிக் கொண்டிருக்கிறது.

அஸீஸ் அவர்கள் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிபராக 1948 ஆம் ஆண்டிலிருந்து 1961 வரை தலைமைப் பொறுப்பை நிறைவேற்றி இருந்தார். தனது அயராத உழைப்பினாலும் நிர்வாக திறமையினாலும் ஆக்கத் திறன் மிக்க நவீன கல்வித் திட்டங்களினாலும் அஸீஸ் ஸாஹிராவை இந்த நாட்டின் மிகப் பெரும் முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் ஆக்கினார். கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறை சாரணியம், கெடற், பேச்சுத் திறன், மொழியலங்காரம், விவாதம், இலக்கிய ஆற்றல், தொழிற்கல்வி என்று எல்லாத் துறைகளிலும் ஸாஹிரா அதன் உன்னத நிலையை அவர் காலத்தில் நிரூபித்தது. சிறந்த  கல்வி போதனை, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு அனைத்திலும் அஸீஸ் திறம்பட உழைத்தார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இவரது பதவிக் காலம் பொற்காலமாக அமைந்திருந்தது.

1952 இல் அஸீஸ் அகில இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த போது ஸ்மித் – மண்ட் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்காவில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்று திரும்பினார். இப்பயிற்சியை பயன்படுத்தி ஸாஹிராவில் அஸீஸ் ஆற்றி வந்த கல்விச் சேவைகளும் அறிமுகப்படுத்திய புதிய கல்வித்திட்டங்களும் ஸாஹிராவின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி, பொதுவாக இலங்கை முஸ்லிம்களின் கல்விச் சிந்தனைக்கும் முன்னேற்றத்திற்குமான பங்களிப்பாகவும் விளங்கியது.

எ.எம்.எ. அஸீஸ் அவர்கள் அரசாங்கத்தில் செனட்டராகவும் பணிபுரிந்தார். எ.எம்.எ. அஸீஸ்  அவர்கள் 1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி காலமாகும் வரை கல்விக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் பொதுநல சேவைகளுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்திருந்தார்.

எ.எம்.எ. அஸீஸ்  அவர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி முத்திரை வெளியிட்டது.

எ.எம்.எ. அஸீஸ்  அவர்களின் கொழும்பில் ஸ்தாபித்து வைத்த இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (YMMA) இன்று 150க்கும் அதிகமான கிளைகளுடன் நாடு முழுவதும் பரவிய நிலையில் செயலாற்றி வருகிறது. எ.எம்.எ. அஸீஸ்  அவர்களின் ஆலோசனைகளின் படி கல்வி முன்னேற்றம், சுகாதார அபிவிருத்தி, பாதை திருத்தம், அநாதைகள் பராமரிப்பு, கலாசார வளர்ச்சி உட்பட பல பொதுநல சேவைகளில் இச்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன. யாழ் மண்ணில் பிறந்த கலாநிதி எ.எம்.எ. அஸீஸ் போன்று மாமேதைகள் மேலும் உருவாக வேண்டும்.

அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால் (ஜே.பி)
யாழ்ப்பாணம்

அதிபர் லைலா முஹிடீன்

யாழ்,கதீஜா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முன்னால் அதிபர் மர்ஹூமா லைலா முஹிடீன்
தொகுப்பு :- இக்பால் பரீத்
தகவல் ஹஸீனா அஸ்ரப்

கல்வித் துறையில் தடம்பதித்த கலாபூஷணம் லைலா மொஹிடீன்

யாழ்ப்பாணம், சோனக தெருவைச் சேர்ந்த மீரா மொஹிடீன் – மரியம் தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகளுள் மூன்றாவது பிள்ளையாக லைலா மொஹிடீன் 29-12-1934 அன்று பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் ஆரம்பக் கல்வியைக் கற்ற முஹம்மதிய்யா கலவன் பாடசாலையில் (அல்லாபிச்சை பள்ளி) கற்றார். 
தொடர்ந்து லைலா மொஹிடீன் அவர்கள் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். வேம்படி மகளிர் கல்லூரியில் மாணவியாக இருக்கும் போது எழுத்துலகில் கால் பதித்தார். லைலா மொஹிடீன் புனைக்கதை, தொடர்கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றிலும் சமயம், இலக்கியம், கல்வி எனும் துறைகளிலும் எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார். கவிதைகளும் வடித்துள்ளார். லைலா மொஹிடீன் அவர்களின் முதலாவது சிறுகதையான “தற்கொலை” , “விதியா மதியா” என்பன வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் சஞ்சிகையில் 1949,1950 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இவரது தொடர்கதையான “மீண்ட இன்பம்” 1960,1961 ஆம் ஆண்டுகளில் YMMA வெளியிட்ட “வாலிப முஸ்லிம்” மாத சஞ்சிகையில் வெளியானது.

1952,1953 ஆம் ஆண்டுகளில் இவர் பாடசாலை சஞ்சிகைக்கு எழுதிய “சுயெஸ் கால்வாய் பிரச்சினை”, “பாரசீக எண்ணெய் தகராறு” என்பன பாடசாலையில் சிறந்த கட்டுரைகளுக்காக பரிசில்களை பெற்றவையாகும்.

லைலா மொஹிடீன் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்ற பின் இந்தியாவில் தமிழ்நாட்டில் திருச்சியில் அமைந்திருக்கும் Holy Cross College இல் பி.ஏ. பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதன்பின்  நாடு திரும்பி தர்கா டவுண் மத்திய மகளிர் கல்லூரியில் அதிபராக 1958 இல் பதவியேற்றார். அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட் அவர்களின் விருப்பதிற்கிணங்க மாத்தளை சாஹிரா மகளிர் கல்லூரியில் (ஆமினா) 1961 இல் அதிபராக பதவியேற்றார். அங்கிருந்து திரும்பவும் தர்கா டவுண் மகளிர் கல்லூரிக்கே அதிபராக பதவி வகித்தார். அந்த சந்தர்ப்பங்களில் தர்கா டவுண் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சனி, ஞாயிறுகளில் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றினார். 1965 இல் டிப்ளோமா செய்வதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்ந்தார். டிப்ளோமாவை முடித்ததன் பின் தர்கா டவுண் மகளிர் கல்லூரிக்கே அதிபராக நியமனம் பெற்றார். தர்கா டவுண் மகளிர் கல்லூரியில் லைலா மொஹிடீன் அவர்களின் அதிபர் காலம் பொற்காலமாக அமைந்தது.

சொந்த ஊரான யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணம் கதீஜா கல்லூரியில் 1969 இல் அதிபராக நியமனம் பெற்றார். 1985 ஆம் ஆண்டு வரைக்கும் கதீஜா கல்லூரியில் அதிபராக பதவி வகித்தார். அக்காலங்கள் கதீஜா கல்லூரிக்கு பொற்காலமாக அமைந்தது. லைலா மொஹிடீன் அவர்கள் அதிபர் பதவியில் முதலாம் தரத்தை கொண்ட இவர் SLAS, SLEAS போன்ற பரீட்சைகளில் தேர்வு பெற்றார். 

அபுதாபியில் 1985 இல் இஸ்லாமிய ஆங்கிலப் பாடசாலையொன்றில் பகுதித் தலைவியாக பதவியேற்று 13 ஆண்டுகள் திறம்பட சேவையாற்றினார்.  1998 இல் இல்மா சர்வதேச மகளிர் பாடசாலையில் தனது பணியை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வரை திறம்பட சேவை புரிந்தார்.

2004 ஆம் ஆண்டு தொடக்கம் லைலா மொஹிடீன் இஸ்லாமிய கலாசார பண்பாட்டு அமைச்சின் ஆலோசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இறுதிவரை சேவை புரிந்தார்.

லைலா மொஹிடீன் அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் “கலாபூஷணம்” பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார்.

ரவீந்திரநாத் தாகூரின் பல சிறுகதைகளை இவர் மொழிபெயர்த்துள்ளார். “காபுலி வாலா”, “விடுதலை”, “நாகப்பாம்பு”ஆகியன மணிக்குரல் சஞ்சிகையில் 1960,1965 காலப்பகுதிகளில் வெளியாகின. மற்றொரு மொழிபெயர்ப்புக் கதையான “பேசும் கண்கள்” 1961 இல் வீரகேசரியில் வெளியானது.

ஆங்கிலத்தில் எழுதிய “Pearl Fishing in Ceylon” 1952 இல் வேம்படி மகளிர் பாடசாலை சஞ்சிகையிலும் “Mouwlana Azad and his Concept of Training Courses” 1965 இல் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி சஞ்சிகையில் வெளியானது.

இஸ்லாம் சம்பந்தமாக “ரமழான் மகத்துவம்” வீரகேசரியிலும் “திருக்குர்ஆன் மகத்துவம்”   ஈழ நாட்டிலும் 1970 இல் வெளியானது. பதிப்பாசிரியர் கவிஞர் சாரணா கையூம் அவர்களின் “இக்பால்” விஷேட மலரில் “இக்பால் தத்துவம்” பற்றி எழுதினார். 1969 இல் தினகரனில் ஆறுமுக நாவலர் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்.

தமிழ் இலக்கியங்களில் நன்கு ஊறித்திளைத்தவரான லைலா மொஹிடீன் “இலக்கியம் கண்ட ஏந்திழையர்” என்ற தலைப்பில் மணிக்குரலிலும் “அன்பினைத்திணை” பற்றி 1960 இல் காலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி சஞ்சிகையிலும் “இஸ்லாமிய இலக்கியங்களில் அரபுத் தமிழ்” என்ற தலைப்பில் 1968 இல் அளுத்கம ஆசிரிய பயிற்சிக் கல்லூரி சஞ்சிகையிலும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் வெளியிட்ட சஞ்சிகையில் “எழுத்தாளர் அபுல்கலாம் ஆஸாத்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை சிறந்த ஆய்வாக அமைந்தது.

ஒலிபரப்புத் துறையைப் பொறுத்தவரையில் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் இவரது பங்களிப்புகள் அளப்பரியது.

லைலா மொஹிடீன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பட்டப்பின் கல்வித் தகுதி தேர்விலே ஆக்கப் படைப்பாக “பல்கலைக்கழக புதுமுக வகுப்புக்கு பாஞ்சாலி சபதம்” என்பதனை வெளியிட்டார்.

லைலா மொஹிடீன் கல்வித்துறையில் கற்ற கல்வியும் பெற்ற அனுபவமும் அவரைக் கல்வித் துறையின் பால் நன்கு சிந்திக்கத் தூண்டின. இதன் பயனாக கல்வியோடு சம்பந்தப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். “முத்தமிழில் ஒன்று நாடகம்” (1961), “கட்டுரையாக்கம்” (1962), “பாடசாலைகளில் சரித்திரம் கற்பித்தல்” (1966), “கட்புல, செவிப்புல சாதனங்கள்” (1967), “வகுப்பறையில் உளவியல்” (1969), “புதிய கல்வித்திட்டம்” (1974) இதனை விடவும் மேலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.     

லைலா மொஹிடீன் அவர்கள் 45 ஆண்டுகள் ஆசிரியையாக , அதிபராக, கல்வி நிர்வாகியாக, கல்வி ஆலோசகராக களம் பல கண்ட இவர் தனது இறுதி சில மாதங்கள் நோய்வாய்ப்பட்டு 10-05-2010 இல் தனது 75 ஆவது வயதில் வபாத்தானார்.
இவரால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பெருமை அடைகிறார்கள். மேலும் இவரைப் போன்ற முஸ்லிம் பெண் மேதைகள் உருவாக வேண்டும்.

அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால் (ஜே.பி)
யாழ்ப்பாணம்

Sunday, December 25, 2016

அல்லாஹ்வின் அற்புதம் ஒரு மருத்துவரின் குறிப்பு

நன்றி, டொக்டர் றயீஸ்,,

இதயம் இருந்தால் கொஞ்சம் இந்த பிஞ்சின்  இதயம் பற்றி படியுங்கள்.. நிச்சயம் அல்லாஹ்வுக்கு நன்றி  சொல்லி சுஜூதில் விழுவீர்கள்...

"எனது உள்ளங்கைக்குள் காயப்பட்ட ஒரு சின்ன இதயம்"
டாக்டர் முஸ்தபா றயீஸ்
கடந்த வாரம் ஒரு நாள் வழமைபோல் சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (Pediatric Cardiac ICU ) வழமையான எனது வோட் ரவுண்டை முடித்துவிட்டு, நானும் என்னோடு கடமைபுரியும் சக வைத்தியர்களும் முற்பகலில் வைத்தியசாலையின் Staff Restaurant க்கு வந்து தேனீர் அருந்தி அளவளாவிக் கொண்டிருந்தோம்.

திடீரென எங்களது Bleep க்கு அழைப்பு வந்தது. “Cardiac arrest” “Cardiac PICU” Bed 5. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 5ம் கட்டிலில் இருக்கும் குழந்தையின் இதயம் நின்றுவிட்டது என்று அந்த வைத்தியசாலையின் டெலிபோன் ஒபரேட்டர் தொடராக மூன்று முறை அழைத்தார். முதல் அழைப்பிலேயே தேனீரை பாதிக் கோப்பையோடு விட்டுவிட்டு PICU யை நோக்கி விரைந்தோம். இவ்வாறான அவசர அழைப்புகள் பல வைத்தியர்களுக்கும் தாதிகளுக்கும் ஒரே நேரத்தில் செல்வதால் Cardiac arrest இதயம் நின்றுவிடும்போது இயங்க, மறுத்து விட்ட இதயத்தை மீண்டும் இயங்க வைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு (Cardiopulmonary resuscitation) பலர் உடனடியாக வந்து விடுவார்கள்.

அது மூன்று மாதக் குழந்தை. அந்தப் பெற்றோர் திருமணம் செய்து 15 வருடங்கள் பிள்ளைப் பாக்கியம் அற்றவர்களாக இருந்தார்களாம். அந்தத் தாய் தலை தெறிக்கக் கதறி அழுது அதிதீவிர சிகிச்சைப் பிரிவை அதிர வைத்ததும் குழந்தையின் தந்தை தன்னிலை மறந்து அங்கிருந்த சுவர்களை உடைக்கும் முயற்சியில் இறங்கியதும் அதற்குச் சாட்சியமாக இருந்தது.

15 வருடங்களாகப் பிள்ளைப் பாக்கியம் இல்லாது பல வைத்தியர்களைச் சந்தித்து... பல வைத்தியசாலைகளில் ஏறி இறங்கி... தாய் என்ற அந்தஸ்து இல்லாமலேயே மரணித்து விடுவேனோ என்ற ஆதங்கத்தில் பரிசோதனைக் குழாய் கருக்கட்டல் முயற்சியிலும் இரு முறை இறங்கி... அதுவும் கைகூடாது வயதும் நாற்பதை எட்டுகின்ற நிலையில்... அல்லாஹ் எனக்கு குழந்தையொன்றைத் தருவான் என்ற நம்பிக்கையில் அந்த அரபுப் பெண் எடுத்த கடைசி முயற்சி பரிசோதனைக் குழாய் கருக்கட்டல் வெற்றிகரமாக முடிந்தது.

பரிசோதனைக் குழாய் கருக்கட்டல் நடந்து விட்டது. முளையத்திற்கு வயது 5 நாட்கள். கலங்கள் பிரிந்து வளர்கின்றன. கருக்கட்டல் பரிசோதனைக் குழாயில் நடந்த போதிலும், 56 நாட்களின் பின்னர் அந்த முளையம் வளர்வதற்கு தாயின் கருப்பையே தேவை. 6 நாட்களுக்குப் பின்னர் அந்த முளையத்தால் கருப்பை சூழலில்லாமல் வாழ முடியாது வளர முடியாது. எனவே, வைத்தியர்கள் ஆறாவது நாள் ‘Lab’ இல் பரிசோதனைக் குழாயில் இருந்து முளையத்தை எடுத்து தாயின் கருப்பையில் வளர்வதற்காக பதித்து விடுவார்கள். தொடர்ந்து அந்த முளையம் சிசுவின் தாயின் கருவறையில் கச்சிதமாய் வளரும்.

15 வருடங்கள் பாலைவனமாக இருந்த கைப்பிடியளவான கருவறை இப்போது உயிருள்ள சிசுக் கலங்களால் நிறைந்து வயிறு நிறைய வளர்கிறது. சிசு வளர வளர கருவறை அதற்கேற்றாற்போல் வளர்ந்து இடம் கொடுக்க... தாயின் வயிறும் விரிந்து இடம்கொடுக்க... அந்தச் சிசு தாயில் ஏற்படுத்தும் ஹோமோன்களின் தாக்கத்தால் தாயின் உடலும் உள்ளமும் மனோநிலையும் மாறி... உளப் பாங்கில் ஏற்பட்ட மாற்றங்களையெல்லாம் சந்தித்து... சுகம் அனுபவித்து... தாயின் பெருமையை உணர்ந்தவளாய்... சிசுவிற்கும் சேர்த்து சுவாசித்தவளாய்... சுமை தாங்குவதை சுவைத்தவளாய் 10 மாதங்கள் காத்திருக்கிறாள் அந்தப் பெண்.

கர்ப்ப காலம் முடிவடைந்து விட்டது. உள்ளேயிருந்த சிசுவின் கருவறை வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது. கருப்பையின் கதவுகள் பலமாகத் தட்டப்படுகின்றன. அதன் விளைவாக ஹோமோன்கள் உணர்ச்சி பெற்று ஊற்றெடுக்கின்றன. கருப்பையின் கதவுகள் மெதுமெதுவாக விரிய ஆரம்பிக்கின்றன. ஆமாம், சிசு வெளியே வர கருப்பையின் கதவுகள் 10 சென்றி மீற்றர் விரிந்து இடம் கொடுக்க வேண்டும். எமது வீட்டுக் கதவுகள் போன்று திடீரெனத் திறந்து கொடுக்க, 10 மாதங்கள் கட்டிக் காத்துப் பாதுகாத்த கருப்பை ஒரு சாதாரண தங்குமிடமல்ல. அதன் கதவுகள் 10 சென்றி மீற்றர் திறக்க 10 மணி நேரங்கள் எடுக்கும். மில்லி மீற்றர் மில்லி மீற்றராய் திறந்த கதவுகள் 10 மணிநேரத்தில் முழுமையாய் திறக்கப்பட்டு விட்டன. கருப்பை சிசுவைப் பலமாகத் தள்ள ஊற்றெடுத்த ஹோமோன்களின் வீச்சினால் கருப்பையில் இருந்து வெளி உலகிற்கு வரும் பாதை பதப்படுத்தப்பட, அல்லாஹ் அற்புதமாய்ப் படைத்த மூன்றரைக் கிலோ நிறையுள்ள, 50 சென்றி மீற்றர் நீளமான அந்தச் சிசு நெளிந்து சுளிந்து சுருங்கி ஒற்றையடிப் பாதையூடாக உலகிற்கு வந்து சேர்ந்து விட்டது.

ஸூரா அபஸவில் ‘‘பின்னர் பாதையை இலகுவாக்கிக் கொடுத்தோம்’’ என்று அல்லாஹ் அதனை வர்ணிப்பதன் பின்னணியில் ஊசித் துளையின் ஊடாக ஒட்டகத்தை அனுப்பும் முயற்சியாய் இருக்கும் இந்தப் பயணம் அற்புதமானதும் சிந்திக்கின்றவர்களுக்கு ஓர் அத்தாட்சி யாகவும் இருக்கிறது.

குழந்தையை மடியில் எடுத்த தாயும் தந்தையும் குதூகலித்து நின்றனர். அரபு நாடொன்றின் வைத்தியசா லையில் பிறந்த அந்தக் குழந்தையின் வரவை 15 வருடங் களாக எதிர்பார்த்திருந்த பெற்றNhர் வைத்தியசாலையில் பெரும் வரவேற்பு விழாவையே ஏற்பாடு செய்திருந்தாக சொன்னார் அந்தத் தாயின் சகோதரன்.

இனிப்புப் பண்டங்கள் பரிமாற... உறவினர்கள் வந்து போக... முதல் நாள் குதூகலிப்பில் கடந்து விட்டது. அடுத்த நாள் வீடு செல்ல ஆயத்தம். அற்கு முன்னர் சிறுவர் நோய் வைத்திய நிபுணர் குழந்தையைப் பரிசோதித்து வீட்டுக்கு அனுப்புவதுதான் வழக்கம்.

வழக்கம்போல் வைத்திய நிபுணர் பரிசோதனையை ஆரம்பிக்கின்றார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பரிசோதித்த வைத்தியர், தனது Stethoscope ஐ குழந்தையின் நெஞ்சில் வைக்கிறார். பல முறை பரிசோதிக்கிறார் திருப்தியில்லை. மீண்டும் மீண்டும் நெஞ்சறையின் பல இடங்களிலும் வைத்து இதயத்தின் சப்தத்தைக் கேட்கிறார். இதயம் பலமாய் அடிக்கிறது. இதயம் இயங்கும் போது ‘லப் டப்’ என்ற சப்தம் Stethoscope இல் இனிமையாகக் கேட்கும். பரிசோதித்த வைத்தியரின் காதுக்குள் ‘லப் டப்’ இற்கு மேலாக இன்னும் சில சப்தங்கள்! ‘சூஸ்ஸ்ட் ஸ்ஸ்ஸ்’ என்றெல்லாம் வித்தியாசமான உயர் தொனியிலான சப்தங்கள் (Murmurs) கேட்கவே அவர் மௌனமாகி விட்டார்.

வைத்தியரையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரும் உறவினரும் மட்டுமே இருந்த அந்த அறையில் மயான அமைதி. 

வைத்தியர் தொடர்ந்தும் மௌனமாய் இருக்கிறார். அவரின் காதுகளுக்குள் பூகம்பங்கள் வெடிக்கின்றன. அவரின் Stethoscope குழந்தையின் நெஞ்சறைச் சுவருக்கு மேல் தொடர்ந்தும் இருக்கிறது. காதுகளுக்குள் வெடிக்கும் இதயப் பூகம்பத்தினை அடையாளப்படுத்திக் கொண்ட வைத்தியர் பெற்றோரோடு பேசுவதற்கு வார்த்தைகள் வந்து சேராது சில நிமிடங்கள் சிரமப்படுகிறார். பின்னர், வார்த்தைகள் வாய்க்கு வந்து சேர்ந்து விட்டன. Breaking Bad News காதுகளை அடைக்கும், உள்ளத்தை உடைக்கும் அந்தச் செய்தியை சொல்லித்தான் ஆக வேண்டும்.

‘‘குழந்தையின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் மற்றோர் இடத்தில் இதய நாடியின் அடிப்பாகம் இரத்தம் போதுமான அளவு செல்ல முடியாது சுருங்கி இருக்கிறது. அத்துடன் இதயவறையில் ஒன்று வீங்கிப் பெருத்து விட்டது. நான்கு பிரச்சினைகள். இதனை Tetra logy of Fallouts என்று சொல்வார்கள். இதனை சத்திர சிகிச்சை மூலம் சுகப்படுத்த முடியும். எனவே, குழந்தைக்கு 23 மாதங்கள் கழிந்ததும் சத்திர சிகிச்சைக்கு ஆயத்தமாகுங்கள்’’ என்று சொன்னார் குழந்தை நோய் வைத்திய நிபுணர்.

கலகலப்பாய், குதூகலமாய் இருந்த அந்த அறை இடி விழுந்து நொறுங்கிவிட்ட உணர்வு. அனைவரின் கண்களும் குளமாகி உள்ளம் உடைந்து விட்ட நிலையில் அந்தத் தாய் கேட்கின்றாள். ‘‘ஏன் டொக்டர் இப்படி இதயத்தில் ஓட்டைகளோடு இந்தக் குழந்தை பிறந்தது?’’ அவளின் கேள்வி நியாயமானது. ஆனால், இதற்கான பதில் அந்த வைத்தியருக்கு மட்டும் தெரிந்துவிட்டால் போதும், உலகின் பணக்காரர்களின் பட்டியலில் முதலாம் இடத்தை அவரால் பிடித்துவிட முடியும். ஆனால், அல்லாஹ்வின் படைப்பிற்கு முன்னால், அதன் அதிசயத்துக்கு முன்னால் அதிர்ந்து நிற்கும் அப்பாவிகள்தான் இந்த விஷேட வைத்திய நிபுணர்கள் என்பதுதான் யதார்த்தம்.

‘‘மூன்று மாதங்களில் சத்திர சிகிச்சை செய்து ஓட்டை விழுந்த அந்தச் சின்ன இதயத்தை சரி செய்து விடுங்கள்’’ என்று அறிவுறுத்தப்பட்டது. இலவு காத்த கிளிபோல் பதினைந்து பாலைவன வருடங்கள் காத்திருந்து பெற்ற அந்தக் குழந்தையின் ஒபரேஷனுக்காக உலகில் இன்றுள்ள மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த அரபு நாட்டிலிருந்து லண்டனுக்கு வந்தனர் குழந்தையின் தாயும் தந்தையும் குடும்பத்தினரும்.

லண்டனில் அந்தப் பிரபலமான வைத்தியசாலையின் ஒபரேஷன் தியேட்டரில் மூன்று மாதக் குழந்தையின் நெஞ்சறை திறக்கப்பட்டு விரிக்கப்படுகின்றது. ஓட்டை விழுந்த இதயம் தனக்கு இயலுமான வேகத்தில் நெஞ்சறைக்குள் Pericardium என்ற உறையினுள் துயரத்தில் துடிக்கின்றது. உறையும் திறக்கப்படுகிறது. இதோ அல்லாஹ்வின் அற்புதப் படைப்பான இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது, சுப்ஹானல்லாஹ்!

யா அல்லாஹ்! நீயே சிறந்த படைப்பாளி. இவ்வளவு அற்புதமாய் இந்த இதயத்தைப் படைக்கின்ற சக்தி பெற்றவனே, உனக்கே புகழனைத்தும்! ஏழு வானங்களைப் படைத்து... அதன் அடிவானத்தை நட்சத்திரங்களால் அலங்கரித்து... பூமிப் பந்தையும் படைத்த நீயே இந்த இதயத்தையும் படைத்தாய் என்பதை சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது ஒபரேஷன் தியேட்டரில் சுஜூதில் விழுந்துவிடச் சொல்லுகின்றது உள்ளம்.

ஸூரா ஆல இம்ரானின் இறுதி வசனங்கள் சொல்வது போல் உன்னை நான் ஒபரேஷன் தியேட்டரில் நின்று கொண்டு (திக்ர்) ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். பள்ளி வாசலின் சுவர்களுக்குள் ஊற்றெடுக்கும் இறையச்சம் ஒபரேஷன் தியேட்டரின் சுவர்களுக்குள் ஊறிப் பெருகுவதை உணர்கின்றேன். மருத்துவ விஞ்ஞான அறிவு அறிவுக் கடலின் ஒரு துளி மாத்திரமே என்பதை உணர்கிறேன். உனக்கே புகழனைத்தும். ‘‘ரப்பனா மா கலக்த ஹாதா பாத்திலா சுப்ஹானக ஃபகினா அதாபன்னார்- இறைவா! நீ எதனையும் வீணுக்காகப் படைக்கவில்லை. நீயே தூய்மையானவன் எம்மை நரகத்திலிருந்து பாதுகாப்பாயாக’’ என்ற இறை வசனம் அந்தத் தியேட்டரின் சுவர்களில் முட்டிமோதி எதிரொலிப்பது போன்று இருந்தது.

ஒபரேஷன் முடிந்து விட்டது. இதயத்தின் துவாரங்கள் அடைக்கப்பட்டு விட்டன. சுவர் கழற்றப்பட்ட காயப்பட்ட இதயம் கப்பீரமாய் துடிக்க ஆரம்பித்தது. நெஞ்சறைச் சுவர் மீண்டும் சேர்த்துத் தைக்கப்பட்டது. குழந்தை அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) கொண்டு வரப்பட்டது.

ICU இல் 3 நாட்கள் கழிந்து விட்டன. நான்காவது நாள் குழந்தையின் காயப்பட்ட இதயம் வலுவிழக்கின்றது. இரத்த அமுக்கம் (Blood Pressure) குறைகின்றது. இதயத்தில் நடுக்கம் ஏற்படுகின்றது (Arrhythmias). அந்தச் சின்ன இதயம் காயங்களோடு என்னால் ஓட முடியாது என்று ஓய்வு எடுத்துக் கொள்ள முனைகின்றது. இதயத் துடிப்பின் வேகம் குறைகின்றது. இந்த நிலையில்தான் அன்று அந்த அவசர அழைப்பு. தேனீர் கோப்பையை பாதியில் விட்டு விட்டு நாங்கள் ஓடியதும் அந்த அழைப்புக்காகத்தான்.

இதயத்தை இயங்க வைக்க (Cardiopulmonary resuscitation) மருத்துவ விஞ்ஞானம் படித்துத் தந்த அனைத்து முயற்சிகளையும் செய்கின்றோம். நெஞ்சறையில் மசாஜ், நுரையீரலுக்குள் ஒட்சிசன், இதயத்தை இயக்கவைக்கும் மருந்துகள்... இந்த முயற்சிகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிட்டன அவை அந்த இதயத்தைத் தொட்டு விடவும் சக்தி பெறவில்லை.

குழந்தையின் பிரஷர் குறைகின்றது. வைத்தியர்கள் எங்களின் பிரஷர் ஏறுகின்றது. இதயம் இயங்க மறுக்கின்றது. கடைசி முயற்சியாக, பிளந்து பொருத்திய நெஞ்சறையின் 15 தையல்களும் மீண்டும் பிரிக்கப்பட்டன. நெஞ்சறை மீண்டும் திறக்கப்படுகிறது. நெஞ்சறைக்குள் கையைவிட்டு இதயத்தை உள்ளங்கைக்குள் எடுத்து அதனைக் கையால் சுருக்கி விரிய வைத்து இதயம் தானாக செய்யும் வேலையை உள்ளங்கைக்கு கொடுத்து சுருங்கி விரிய வைத்தோம். அந்த உடைந்து போன இதயம் உள்ளங்கை விரியும்போது செயற்கையாக விரிகின்றது. சுருக்கும்போது சுருங்குகின்றது. ஆம், அதன் தன்னியக்கத் தன்மையை அது இழந்து விட்டது.

ஒரு மணி நேரமாக உள்ளங்கையில் இதயத்தை வைத்து சுருக்கி விரித்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஒரு மணி நேரத்துக்குள் மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விட்டது. தானாக இதயம் சுருங்கும் போது போதியளவு இரத்தம், ஒட்சிசன் மூளைக்குள் செல்லும். ஆனால், எங்கள் கைகளால் அதனை சுருக்கி விரிய வைக்கும்போது போதியளவு இரத்தத்தைப் பாய்ச்சும் அழுத்தத்தை இதயத்தினால் கொடுக்க முடியாமல் இருந்தது.

ஒரு மணி நேர முயற்சி எந்தப் பலனும் அற்றுப்போக அந்தச் சின்ன இதயம் உள்ளங்கையிலிருந்து கை நழுவிச் செல்ல அதன் ரூஹும் மேல்நோக்கிச் சென்று விட்டது.

சிந்தித்துப் பார்க்கிறேன். அற்புதமாய் வடிவமைத்துப் படைப்பவன் அந்த அற்புதப் படைப்பில் மிகச் சிறிய ஒரு குறையை வைக்கின்றபோதுதான் அந்தப் படைப்பின் அற்புதம் புரிகிறது.

துரதிஷ்டம், அந்தக் குழந்தையின் இதயம் எங்கள் உள்ளங்கையில் எங்களுக்கோ எதுவும் செய்ய முடியாத நிலை!

‘‘யா அல்லாஹ்! எனது குழந்தையின் இதயத்தை வைத்தியர்களின் கையில் கொடுக்காமல் நீயே இயக்கிக் கொண்டிருக்கிறாயே உனக்கே புகழனைத்தும். ஸூரா சஜதாவின் 9 வது வசனத்தில் சொல்வது போல நீ மனிதனைப் படைத்து சீரமைக்கின்றாய். ஆனால் மனிதன் நன்றியற்றவனாக இருக்கின்றான். ஸூரா அல்கலமின் 25ஆம் வசனத்தில் சொல்வதுபோல் நீ எமக்கு கேள்விப் புலன், பார்வைப் புலன் எல்லாம் தந்திருக்கிறாய். இருந்தபோதும் நாங்கள் நன்றிகெட்ட மனிதர்களாய் இருக்கிறோம். யா அல்லாஹ்! எங்களை உனக்கு நன்றி செலுத்தும் மனிதர்களாக, நின்ற நிலையிலும் இருந்த நிலையிலும் சாய்ந்த நிலையிலும் உன்னை நினைவு கூரும் மனிதர்கள் கூட்டத்தில் சேர்த்து விடுவாயாக’’ என்று மனம் துஆக் கேட்கும் நிலையில் இறந்துபோன அந்த உடலின் நெஞ்சு மீண்டும் தைக்கப்பட்டு மண்ண றையில் வைப்பதற்காக அந்த அரபு நாட்டுக்கே மீண்டும் அனுப்பப்பட்டு விட்டது.

யா அல்லாஹ்! எங்களை சுகமாக வாழவைக்கும் பொறுப்பை நீயே வைத்துக்கொள்! எங்களை சுகவீனமாக்கி நோய்களை சுகமாக்கும் பொறுப்பை வைத்தியர்களின் கையில் கொடுத்துவிடோதே! நீயே புகழுக்குரியவன், தூய்மையானவன்!

டாக்டர் முஸ்தபா றயீஸ்
சிறுவர் நோய் நல விஷேட வைத்திய நிபுணர்
தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர், சிறுவர் நோய் துறை, ரஜரட்ட பல்கலைக்கழகம்,
அதி தீவிர சிகிச்சை நிபுணர், ஹாலிஸ்ரீட் வைத்தியசாலை, லண்டன்.